என்னய்யா நடக்குது?


என்னய்யா நடக்குது?

 

நேற்றுதான் மிக பெருமையுடன்!? 65 வது சுதந்திர தினம் கொண்டாடினோம் இன்று அராஜக வழியில் ஒரு கைது. என்னதான் நடக்குது?

காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற சம்பவங்களையும் ஊழல் குற்றச்சாட்டுகளையும், மத்திய அரசின் முரண்பாடான முடிவுகளையும் வைத்து பார்த்தோமேயானால் நடைபெற்ற அனைத்திருக்கும் காரணகர்த்தாவாக இருப்பது யார் என்பது புரியும்.

இன்றைய கைதுக்கு முன்பாக அவசர கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற சில முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஓரளவுக்கேனும் நல்லவாராகிய அந்தோனியும் அகமது பட்டேலும் புறக்கணிக்கப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது. சரி முக்கிய தலைவர்கள் என்று கருதும் கூட்டத்தில் ராகுலுக்கு என்ன வேலை , அவர் எப்போது காங்கிரஸின் அல்லது மத்திய அரசின் முக்கிய தலைவரானார், ஒரு எழவும் புரியல. ராகுலின் அடாவடியான போக்கால் நடைபெற்ற பல சம்பவங்களுக்கு மகுடம் வைக்கும் விதமாகவே இந்த கைது நடவடிக்கை.

அன்னா என்ன கேட்கிறார் . . . 2ஜி யில் சம்மந்தப்பட்ட காங்கிரஸ் காரர்களையும் கைது செய்ய வேண்டும் என்றோ, அராஜக வழியில் செயல்படும் சில தலைவர்களையும் தலைவிகளையும் கைது செய்ய வேண்டுமென்றோ கேட்கவில்லை அட விடுங்கப்பா அவர் என்ன ஆங்கிலேயர்களை விரட்டிய மாதிரி உங்களை நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்றா சொன்னார். ஒன்றே ஒன்று . . ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா விவகாரத்தை சரி செய்ய முயன்று அதற்காக ஒரு உண்ணாவிரதம்.

அதை ஏன் அரசு கலைக்க முடிவு செய்ய வேண்டும் ? அவரை ஏன் கைது செய்ய வேண்டும்? இவரை இப்படி அடக்கி ஒதுக்கத்தான் ஏற்கனவே ஒரு சாமியாரை வைத்து நாடகம் நடத்தியதா அரசு, சந்தேகங்கள் வருகிறது. இப்போ இந்த கைதால் கொதித்து போயுள்ளவர்களுக்கு பதில் தரும் வகையில் சாமியின் நாடகம் நடத்தப்பட்டதா? ஆமா அன்று உண்ணாவிரதம் இருந்த சாமியை கைதுசெய்தோம் அதுபோல்தான் அன்னாவையும் செய்திருக்கிறோம் இது சட்ட நடவடிக்கையே தவிர ஊழலுக்கு ஆதரவாக நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று காட்டுகிறார்களோ.

நீங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அன்னா கேட்கின்ற மசோதா குறித்தான சந்தேகங்களையும் மாற்றங்களையும் செய்து விடுங்கள் . ஏன் தடுமாறுகிறீர்கள்.

ராகுலின் அரசியல் கருத்துக்களும் அரசியல் திட்டங்களும் எப்படி தோற்று போனது என்று கடந்த தேர்தல்களின் போது எல்லாரும் அறிந்ததே, இப்படி பட்ட ஒரு நபரையும் கூட்டத்துக்கு கூட்டிய பிரதமர் என்ன ஆற்றல் படைத்தவராக இருக்க முடியும், நம்மால் செய்ய முடியாது என்ற ஒரு நிலை வரும் அதில் தொடர்ந்து கொண்டிருப்பது முட்டாள்தனமாகவே இருக்கும், மிஸ்டர் பிரதமர் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் கூட்டங்கள் நடத்தினாலும் சிலர் எடுக்கும் முடிவையே நீங்கள் வெளிப்படுத்த போகிறீர்கள் ஆனால் ரிசல்ட் எல்லாம் உங்கள் பெயரிலே வந்து முடியும், அப்போது நீங்கள் உண்மைகளை வெளிப்படுத்த முடியாது.

ரிமோட் கண்ட்ரோலுக்கு ஆடும் பொம்மை வீழ்ந்தாலும் எழுந்தாலும் ரிமோட்டுக்கு ஒன்றுமில்லை, வீழும்போது அடிபடுவது பொம்மைக்கு மட்டுமே.

காங்கிரஸின் கடந்த கால ஊழல் நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியும் சுயநலப்போக்கு நிறைந்ததுமாகவே இருந்திருக்கிறது என்றால் மறுக்க முடியுமா? திமுக வை பணிய வைக்க அல்லது அவர்களிடத்தில் சீட் அதிகம் வாங்கி தமிழகத்தில் காங்கிரஸை வளர்க்க ராகுல் போட்ட கூட்டல் கணக்கு தான் கனிமொழி கைது என்பது எத்தனை பேருக்கு தெரியாது.

மேலும் 2ஜி என்ற ஒன்றை வைத்துக்கொண்டு காங்கிரஸ் ஆடிய ஆட்டம் ரொம்பவே அதிகம் அதன் விளைவே பல லட்சம் மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி விட்டது, இலங்கை குறித்து திமுக வின் கருத்துக்களையும் போராட்டங்களையும் எதிர்ப்பையும் இன்னும் திமுக நிலைப்பாட்டையே மாற்ற வைத்தது காங்கிரஸின் 2ஜி குறித்த விளையாட்டு, அது எல்லாம் நிறைவு பெற்ற நிலையில் இப்போ லோக்பால் வரைவு மசோதா விவகாரம் அவர்களுக்கு கசக்கிறது.

ரொம்பவே தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது இந்தியா. உலகமே போற்றும் மிகப்பெரிய மக்களாட்சி நாடு என்ற பெயரை காத்து வந்தது அரசியல் அல்ல அரசியல்வாதிகள் அல்ல மக்கள் என்பதை மறந்துவிட்ட ஒரு சிலரின் ஆட்டம் இந்தியாவின் பேரை உலக நாடுகள் மத்தியில் நாரடித்து கொண்டிருக்கிறது. மதம் என்ற சாயம் தவிர்த்து காங்கிரஸுக்கு மாற்றான ஒரு அரசு கண்டிப்பாக அமைய வேண்டும் என்பதே என் ஆவல், இனி காங்கிரஸ் இந்தியாவிலே இருக்க கூடாது என்றும் விரும்புகிறேன்.

மற்ற தேசங்களின் அராஜக போக்கை கண்டித்து வந்த நாம், இப்போது கண்டிக்கப்படுகிறோம். வெட்கமாக இருக்கிறது, ஏன் என்பதும் எதற்கு என்பது புரியாதவர்களுக்கு புரிகின்ற வகையில் செயல் படும் காங்கிரஸுக்கு நன்றி.

பழமொழி ஒன்று சொல்வார்கள் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்று அதுபோல் காங்கிரஸ் மாட்டி கொண்டது. இனியும் என்ன செய்ய முடியும் . . .

இயற்கையான வளம் கொண்ட நாட்டை இயந்திரத்தின் கைகளில் கொடுத்தார்கள் உலக மயமாக்கல் என்ற வார்த்தையால், அப்போது சாகத்துவங்கிய மனிதம் இப்போது அரசு வடிவில் மாறத்துவங்கி இருக்கிறதோ. இனி மக்களாட்சி என்ற முறை மாறி சர்வாதிகாரம் தலையெடுக்க துவங்கி இருக்கும் இந்த வேளையில் மக்கள் என்ன செய்ய போகிறார்கள்.

பல நல்ல கருத்துக்களை சொன்ன தலைவர்கள் இப்போது இல்லை நம்மிடம். அவர்கள் சொன்ன கருத்துக்களையாவது நினைப்போம் அதன்படி நடப்போம் . .

ஊழல் என்பது என்ன என்பதைவிட ஊழலால் வெட்டி எடுக்கப்படும் பணம் எங்கிருந்து வந்தது, யாருடையது, யாருக்கானது, யாரால் உருவானது, என்பதெல்லாம் யோசித்து பாருங்கள், மக்களிடமிருந்து வந்த பணம், மக்களுக்கான பணம், மக்களுடைய பணம், மக்களால் உருவாக்கப்பட்ட பணம், இதைத்தான் ஊழல் என்ற பெயரில் பல கோடிகளாக தங்களது பேரிலும் தங்கள் குடும்பங்கள் பேரிலும் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் ஏன் அரசுமே வெட்டி எடுக்கிறது பாதிக்கபடுபவர்கள் யார் . .மக்கள்தானே . மக்களாகிய நாம் . . . இதற்கு என்ன செய்ய போகிறோம் (அங்காங்கே துவங்கி விட்டார்கள்) எழுச்சி வரட்டும் , அமைதியான வழியில் தீர்க்கபட வேண்டிய ஒரு விசயத்தை அவர்களாகவே பெரிதாக்கி விட்டார்கள். இனி முடிவு மக்கள் கைகளில் . .

ஜெய் ஹிந்த். . . .

பின்னூட்டமொன்றை இடுக