கூடங்குளம் வளர்கிறது ………..நாம்…?


கூடங்குளம் அனுமின் நிலையத்தை எதிர்த்து பலவிதமான போராட்டங்களை நடத்தி அதை செயல்பட விடக்கூடாது என்று முயன்ற நாம் இப்போது எங்கே இருக்கிறோம், கூடங்குளம் அனுமின் நிலையம் செயல்பட்டு அதிலும் இரண்டாவது யுனிட்டும் செயல்படுவதாக செய்திகள் வரும் வேளையில் நாம் இப்போதும் எங்கே இருக்கிறோம் என்று சிந்திப்போம்.

04

கூடங்குளத்தை சுற்றியுள்ள (இப்படித்தான் எழுதி எழுதி பழக்கிவிட்டார்கள்) ஆனால் கூடங்குளத்தை அடுத்துள்ள கடற்கரை கிராமங்கள் மட்டுமே போராட்டத்தை நடத்தி அல்லது நடத்த வைத்து கூடங்குளத்திற்கு எதிரானவர்கள் மீனவர்கள் மட்டுமே என்பதான ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டார்கள், அதனால் என்ன பாதிப்பு எங்களுக்கும் தானே என்று இன்றளவிலும் மீனவர்களில் பலர் பேசிக்கொண்டிருந்தாலும், இன்றும் மீன்பிடித்தொழில் நடக்கிறது மற்றபல என அனைத்தும் நல்லவிதமாகவே இருக்கிறது. ஆனால் . .
அரசு சம்பந்தமான ஆவணங்களில் கூடங்குளத்தின் எதிர்பாளர்கள் என்று நம் மீனவ சொந்தங்கள் மட்டுமே பதிவேற்றப்பட்டிருக்கிறார்கள், இது எங்களுக்கு பெருமை தரும் விசயம்தான் என இன்னும் சொல்லிக்கொண்டிருப்போமேயானால் இன்றளவிலும் ஏமாற்றபட்டுக்கொண்டிருக்கிறோம் என்றே பொருள்.
ஒரு மாற்றம் என்பது பொதுவே பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வரும், வருவதை தடுக்க முடியாது என்பது காலத்தின் கட்டாயம், ஆனால் இதுபோன்ற சந்தர்பங்களில் தான் அரசியலும் மதமும் தங்கள் பங்கை சிறப்பாக செயல்படுத்தும், அப்படியான ஒரு எதிர்கால திட்டத்தில்தான் நம் சமூகம் சிக்குண்டு விட்டது.
அதுவாக வந்திருக்க வேண்டிய பல திட்டங்களும் வளர்ச்சியும் இனி வராது, வரவேண்டுமானால் நாம் நிறைய உழைக்க வேண்டி இருக்கும், அரசியல் வாதிகளின் கால்களிலும் சமய போதகர்களின் கால்களிலும் விழுந்து கிடக்க வேண்டும், (காலங்காலமாக அதைத்தான் செய்கிறோம்). “வரவைத்தோம்” என்ற பெருமை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். எத்தனை எதிர்த்தீர்கள் ஆனாலும் உங்களுக்குத்தான் செய்கிறோம் என்று நம்மை இன்னும் தாழ்த்தி பேசுவார்கள்.
நாம் நம்மை நம்புவர்களுக்கு உயிரையும் கொடுப்போம், அதுபோல் ஒரு நபரின் மேல் முழு நம்பிக்கை வைத்துவிட்டால் அவர்களுக்காக என்ன வேண்டுமானலும் செய்வோம் நம்மை அழித்துகொண்டு, அப்படியான பலனை சிலர் அனுபவித்துவிட்டார்கள், இனியாவது விழித்துகொள்வோம்.

நமக்காகத்தான் போராடினோம் ஆனால் நமக்கு என்ன கிடைத்து என்று சிந்திப்போம், கெட்டபெயரும் எதிர்காலத்தை கேள்வியாக்கி விட்ட சில வழக்குகளும்தானே.
நம்மை மிக எளிதாக பிரித்து ஆண்டு விடமுடியும் என்பது இன்றளவிலும் ஆணித்தரமாக நம்மாலே பரபரப்படுகின்ற ஒரு உண்மை, மணல் கம்பெனிக்காரன் அதைத்தான் செய்தான், இப்போ கூடங்குளமும்.

இதுபோன்ற ஏமாற்றுகாரர்களின் கைகளில் சிக்கிவிடாமல், நமக்காக நாம் போராட முடியாதா..?
நமது ஊரின் வளர்ச்சிக்காக உழைக்கும் நல்ல உள்ளங்கள் பல இருக்கின்றன அவர்களை நாம் மதிக்க மாட்டோம் எங்கிருந்தோ வரும் திட்டங்கள் படி மணலுக்குள் புதைந்து கொண்டு கோமாளிகளாவோம். இனியும் அப்படி இராமல் கூடங்களுத்தை சுற்றியுள்ள வளர்ச்சி திட்டங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம், அவ்வளர்ச்சி திட்டங்களில் நமக்கு எது தேவை என்பதையும் ஆலோசனை செய்தே முடிவு செய்வோம் அவற்றை வைத்து நம் ஊரின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்துவோம்

ஒற்றைக்கட்டாய் நிற்போம் . . . .

தனிப்பஞ்சாயத்தாக வரும் போது , வளர்ச்சி திட்டங்கள் அதிகமாகவே கிடைக்கும் என்றே தோன்றுகிறது, அவற்றை சிறந்த முறையில் கைப்பற்றி ஊரின் வளர்ச்சியின் மகிழ்ச்சி காண்போம் . . .

 

பின்னூட்டமொன்றை இடுக