என்னை தெரியுமா?

கேள்வியை படித்ததும்

இல்லை என் வலைப்பகுதிக்குள் வந்ததும்

இல்லை என் பெயரை படித்ததும் தெரிந்து விடும் அளவிற்கு பிரபலம் அல்ல நான்

 

தென் தமிழகத்தின் ஓரத்தில்

உப்பு கடலும்

உணர்ச்சி மனிதர்களும்

மீனும் பின்ன நானும் உள்ள அழகான கிராமம் என்னுடையது

 

அதன் பெயர் கூட்டப்புளி

 

கூட்டப்புளி வடக்குத்தெருவில் வசதியில்லாவிட்டாலும் வழமையாக வாழ்ந்த திரு.அலங்காரம் சுபேதார் பெற்ற பிள்ளைகளில் மூத்தவர் என் தந்தை திரு.நெல்சன் சுபேதார். அவசியமான அளவு படிப்பு அழகான தோற்றம் உள்ள என் தந்தை என் தாயாரான கஸ்பார் குடும்பத்தின் செல்ல பிள்ளை திருமதி அல்போன்ஸா வை மணந்தது 1976 ஆம் ஆண்டு.

 nelson

அடுத்த ஆண்டான 1977 ஏப்ரல் 15 ம் தேதி என் தந்தைக்கு முதல் குழந்தையாக பிறந்தேன் நான். என்னை பெற்ற அன்னைக்கும் அரவணைத்த அப்பாவுக்கும் நன்றி என்ற ஒற்ற வாக்கு போதாது. நீங்கள் நினைக்கலாம் எல்லாரும் சொல்வதுதானே என்று. இல்லை அப்படி இல்லை. நான் பிறந்த அன்று ஒரு விசேச தினம். ஆம் அது ஒரு வெள்ளிக்கிழமை சரி அது போதாது என்று சித்திரை ஒன்னு. அதுவும் போதாது என்று அது ஒரு அமாவாஸ்யையாகவும் நிறைந்தது. எத்தனை மோசமான தினம். இன்று நான் ஜாதகம், ராசி இவையில் நம்பிக்கை வைக்காதவனாக இருப்பதற்கு இதுவும் காரணமாயிற்று. அன்றே என்னை பெற்றவர்கள் எந்த கவலையும் sahaya mathaஇல்லாமல் என்னை எங்கள் ஊர் அடுத்துள்ள சகாயபுரத்தில் சகாயமாதாவின் காலடியில் வைத்து பிராத்தனை செய்தார்கள்.

இன்றும் என் விசுவாசம் அதுவே அந்த தாயின் அரவணைப்பில் என் தாய் என்னை நல்லதாகவே வளர்த்தார்கள்.

 

என்னை அடுத்த பிறந்த என் தங்கைகள் ரீனா, ரீஜின் என் தலையாய நண்பர்களைப்போல் இருந்தார்கள் அன்பு என்ற வைக்கோலால் கட்டப்பட்ட அந்த கூட்டில் ஐந்து பேராக நாங்கள் அமைதியாக வாழ்ந்தோம்.

 

நல்லா படிக்கும் மாணவனாக அறியப்பட்ட நான் என் மேல்நிலைபடிப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வு பெற்றேன். என் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு ஏற்றி சென்ற என் மாமாவும் எங்கள் பள்ளியின் இன்றைய தலமையாசிரியருமாகிய திரு.சில்வஸ்டின் வாத்தியார் (அவரை நாங்கள் மோட்சவாத்தியார் என்றே அழைப்பதுண்டு) என்னை சார்ட்டர்டு அக்கவுண்ட் படிக்க சேர்த்தது இல்லாமல் தன்னால் இயன்ற அளவுக்கு என்னை ஊக்குவித்தார். இருந்தும் அவருடைய அந்த கனவை நிறைவேற்றாமலே நின்றுவிட்டேன் ஆம் என்னால் அப்படிப்பை தொடர முடியவில்லை. (அவரிடம் மன்னிப்பு கேட்க நினைத்தாலும் இன்னும் முடியவில்லை) படிப்பு பாதியில் நின்றாலும் அவர் தந்த அந்த அறிவு கொண்டு இன்று நான் பஹ்ரைன் நாட்டிலே ஒரு நல்ல கம்பெனி ஒன்றில் அக்கவுண்ட் மேனேஜராக பணியாற்றி கொண்டிருக்கிறேன்.

 

படிப்பு பாதியில் நிறுத்தி நான் பறந்தது சவுதி அரேபியாவுக்கு அப்போ என் வயது 19. அன்று முதல் இன்று வரை அரேபிய நாடுகள் தாம். இடையில் 2003 ஏப்ரல் மாதம் ஊருக்கு வந்த போது என் குடும்பம் எனக்கு திருமணம் செய்து பார்க்க விரும்பி அதற்கான ஏற்பாடுகளை செய்தது.

இராஜாக்கமங்கலம் ஊரில் திரு.சிரில் திருமதி ஜெசிந்தாள் அவர்களின் மூன்றாவது மகளாக பிறந்த ஜெமிலாவை 2003 ஜூலை 2 ம் தேதி திருமதி ஜெமிலாரெஜோலனாக மாற்றி இருவருமாக இல்லறம் புகுந்தோம்.

 

2004 ஜூன் 5

 

அன்பு என்பது உணரப்பட்டது

காதல் என்பது கனிந்தேவிட்டது

உறவு என்பது பரிணாமித்தது

 

ஆம் அதுவரை பொறுப்பில்லாமல் கவலையில்லாமல் இருந்த நான் குடும்பமாகிவிட்டேன் என்னை அப்படி உணர்த்த என்னை உயர்த்த பிறந்தான்

cynel-smile-with-shoe7என் மகன் சைனல் டஃபி.

 

எப்படி மகிழ்ந்தோம் நானும் என் மனைவியும் அவனை பார்த்து பார்த்து ரசித்தோம் ரசித்து கொண்டிருக்கிறோம். இதே வேளையில் நினைத்து பார்க்கிறேன் இப்படித்தானே என்னையும் . . . .

 

அந்த பெற்றோருக்கு என்னால் என்ன செய்ய முடியும் . . .  எவ்வளவோ நினைத்தாலும் சில பல பிரட்சனைகளால் அது இயலாமல் போனது இருந்தும் நாங்கள் சந்தோசமாகவே இருந்தோம் என் தங்கை ரீனாவின் திருமணத்தை என் தந்தை நடத்தினார் அடுத்தவள் ரீஜியின் திருமணத்தை நான் நடத்தினேன். அவ்வளவுதான் என்னால் செய்ய முடிந்தது.

 

2005 தொட்டு பஹரைனில் குடும்பமாக வசித்து வரும் எங்களுக்கு மகிழ்ச்சி என்பது ஊருக்கு வரும் அந்த நேரம் மட்டுமே 2008 மே மாதம் ஊருக்கு வந்து  அம்மா, அப்பா, நான், மனைவி, மகன் அனைவரும் ஒன்றாக ட்ரைனில் வேளாங்கண்ணி போய் சந்தோசமாக என் மகனின் முடி இறக்கி மொட்டையடித்து காணிக்கை செலுத்தி மறக்காத நினைவுகளாய் திரும்பி வந்து ஜூன் 5 ல் 5 வது பிறந்த நாளை சிறப்பாக அம்மாவின் விருப்பம் போல் கொண்டாடி விட்டு ஜூன் 7ல் திரும்பினோம் ஜூலை 13ல் அம்மா என் அம்மா இறைவனடி சேர்ந்தார்கள் என்ற செய்தி இன்னும் நம்ப முடியாததாகவே இருக்கிறது. உடனே ஊர் சென்ற நாங்கள் அம்மாவுக்கான கடமைகளை நிறைவேற்றிவிட்டு அம்மா இல்லாத பிள்ளையாக நிற்கிறேன்.

யாரும் யாருடைய இடத்தையும் நிரப்ப முடியாது

அதுவும் அம்மா என்ற உறவை

 

நெ.ரெஜோலன் சுபேதார்

 

 

 

Advertisements