ஆசிரியர்கள் – ஆக்குபவர்கள்

உருவாக்குவது என்பது எவ்வளவு கடினம் என்பது அந்த கடவுளுக்கே தெரியும், எனினும் தினமும் தன் கண்முன்னே அமர்ந்திருக்கும் அத்தனை பிள்ளைகளுக்கும் அவர்களின் செல்களில் செயல்களில் இருக்கும் ரகசிய திறமைகளை வெளிக்கொணரும் ஒரு சாரார் உண்டு நம் உலகத்தில். அதன் மூலம் அவர்களை உருவாக்கும், கடவுள்கள் உண்டு இங்கே.

 

உருவமில்லாத களிமண் போல் இருக்கும் நம்மை, தட்டி, தடவி, சிறிது சிறிதாய் உருவாக்கி ஒன்றிணைத்து உருப்படும் வகையிலான ஒரு உருவமாக மாற்றி இந்த சமுதாயத்திற்கு தரும் அவர்கள் நிச்சயம் உருவாக்கிகளே.

 

நாலு பிள்ளை என்றாலே, அதில் தனக்கு பிடித்த பிள்ளையை அதிகம் நேசிக்கும் பெற்றோர்கள் உள்ள இங்கு, 40 பிள்ளைகள் இருந்தாலும் அனைவரும் தம் பிள்ளைகளாக நடத்தும் ஆசிரியர்கள் எவ்வளவு நேசிக்க தக்கவர்கள்.

இப்படி ஆண்டுக்கு 40 மாணவர்கள் மாறிக்கொண்டு இருந்தாலும், வளர்ந்து விட்ட நாம் மாறி நடந்தாலும் இழுத்து பிடித்து “எப்படி இருக்கிறாய்” என்று அவர்கள் கேட்டு நம் வளர்ச்சி சிறிதென்றாலும் அதிலும் பெருமை கொள்ளும் மனசும் அன்பும் அவர்களை விட்டு எப்போதும் வெளியேறுவதில்லை.

பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி கொள்ளும் சமுதாயத்தில், நாம் செய்கின்ற தவறுகள் அனைத்தையும் பொறுத்து கொண்டபின்பும் அவர்களையும் நல்ல நிலைக்கு கொண்டுவர முயலும் இவர்களை என்ன செய்ய முடியும்.

இன்னும் சொல்லப்போனால்,

வழிகாட்டி அங்கேதான் இருக்கிறது

வழித்தடங்களும் அங்கேதான். . .

நடக்கும் நாம் மட்டும் . . . .

கடந்து சென்று விடுகின்றோம்

வழிகாட்டியை மறந்து . 

 

சமுதாயத்தை உருவாக்கியவர்களுக்கு சமுதாயம் தன் நன்றியினை செலுத்தும் தினமாக அமையட்டும் இந்த ஆசிரியர் தினம்.

நன்றி . .

 

இனி . .

எனது ஆசிரியர்கள்,

எனக்கு அறிவு தந்த ஆசிரியர்கள் ஏராளம், எனினும் இன்னும் நினைவில் நிற்கும் அவர்களை நினைவு கொள்கிறேன், என் மனதார்ந்த நன்றியினை சமர்பிக்கின்றேன்,

எனக்கு முன்பும், பின்பும் அவர்கள் ஏராளமானவர்களை வளர்த்திருக்கிறார்கள், இன்னும் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்களது பணி சிறக்க வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன்.

என் ஆசிரியர்களை பற்றி சிந்திக்கும் இந்த நேரத்தில் என் உள்ளத்தில் பிம்பங்களாக பதிந்திருக்கும் முகங்களை ஒருமுறை ஓடவிட்டேன்

சுட்டித்தனமா திரிந்த நேரத்தில் இருத்தி படிக்க வைத்த மதிப்பிற்குரிய யுஜின் டீச்சர். மறக்கவே முடியாதவர்.

கண்டிக்கவே தெரியாத எங்கள் முதல் தலைமையாசிரியர் மதிப்பிற்குரிய சாந்தாகுரூஸ் அவர்கள் (பெயர் யோசிக்க சிறிது நேரம் தேவைப்பட்டது பின்ன எல்லாரும் வாத்தியார் என்றழைத்தே பழக்கப்பட்டு போன ஒரு பெயராயிற்றே)

உருவத்தாலே மிரட்டிய மதிப்பிற்குரிய தேவராஜ் வாத்தியார்

தமிழ் சொல்லித்தந்த ராஜ் வாத்தியார்

மறக்க நினைத்தாலும் மறக்கவே முடியாத சத்யாதாஸ் வாத்தியார். இவரது அடிக்கும் கிள்ளுக்கும் பயந்து போய் அறிவியல் பாடம் எப்படி படித்தாலும் மனதிலே ஒட்டவில்லை, எப்படியோ பத்தாம் வகுப்பு பாஸ் செய்தேன்.

தமிழையும் கூடவே எங்களையும் வளர்த்த புலவர்.அகஸ்டின், வெத்தலை போட்டுக்கொண்டு, வேட்டியை அவிழ்த்து கட்டி அவர் பேசும் பேச்சு இன்னும் நினைவில்

அன்பும் படிப்பும் தந்த ரொசாரி டீச்சர்

அதுவரை கூட்டலும் கழித்தலுமாக இருந்த கணக்கு பாடத்தின் அடுத்த கட்டத்திற்கு எங்களை கொண்டு சென்ற ஜெனோவி டீச்சர்

விளையாட்டும் படிப்பும் அடியும் நகைச்சுவையும் என காக்டெயிலாக பாடம் நடத்தும் கமிலஸ் வாத்தியார். இவரிடம் மூன்று வருடங்கள் படித்திருக்கிறேன், பிடித்த வாத்தியார்.

பள்ளிக்கூடம் என்பது வாழ்வின் அடித்தளமாக பத்தாம் வகுப்பு வரை, பின் வாழ்க்கையே படிப்பாக கத்து தந்த பதினொன்றும் பனிரெண்டும்,

பொருளாதாரம் படித்து தந்த எட்வர்டு வாத்தியார், புதிதான படிப்பு அதையும் எளிதாக புரியும் வண்ணம் வண்ணங்களால் பாடமும் வாழ்க்கையும் தந்தார்.

எங்களில் ஒருவராக தமிழும் தமிழ் சார்ந்த பண்பும் கத்து தந்த வெனிஸ் வாத்தியார்.

படம் வரைந்து பாடம் சொன்ன ஆங்கில வாத்தியார் அகஸ்டின்,

தலைமையாசிரியராக திறம்பட செயல்பட்டு மாணவர்களை மட்டுமில்லாத பள்ளியையும் மாற்றிய, வளர்த்திய நல்லாசிரியராக இருக்கும் எங்கள் காண்டீபன் அவர்களை எப்படி மறக்க முடியும்.

அன்று முதல் இன்று வரை எனது தனிப்பட்ட படிப்பின் மீது அக்கறை கொண்டும் எனக்காக முடிந்தவரை முயற்சியும் செய்த இப்போது இருக்கும் என் நிலைக்கு காரணமாக இருந்த மோட்ச வாத்தியார் என்றழைக்கப்படும் சில்வெஸ்டின் வாத்தியார். இவர் தந்த கல்வி என்னை வளர்த்தது, என் நிலையை உயர்த்தியது.

எல்லாரும் அடித்தளம் அமைத்தார்கள் அறிவுக்கு,

இவர் தந்தது ஆற்றலும் அறிவும் வாழ்க்கையை எதிர் கொள்ளும் தைரியமும்.

கேள்வி தந்து விடை எழுத சொல்லும் போதுகூட மொத்தத்தில் 20 நிமிடம் என்றால் நான் மட்டும் 10 நிமிடத்தில் செய்ய வேண்டும் என எண்ணியதும் மட்டுமல்லாம் செய்யவும் வைத்தவர்.

அவசியமே இல்லாத சமயத்திலும் ஆங்கிலத்தில் எழுதி படிக்க வைத்தவர், இன்று அது உதவுகிறது.

இறுதியாக, சில ஆசிரியர்கள் ஒரு ஆண்டுக்கு மட்டும், சிலர் இரண்டு மூன்று வருடங்கள் என்றாலும் எனது 6ம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை எங்களுடனே பயணித்து உடல் ஆரோக்கியத்திற்கான விளையாட்டில் எங்களை ஈடுபடுத்தி எங்களை மகிழ்வித்த மதிப்பிற்குரிய சிரில் வாத்தியாரை நினைவு படுத்துகிறேன். அவர் இன்று நம்மிடையே இல்லை என்றாலும் அவரது ஆன்மா சாந்தியடைய மன்றாடுவோம்

என்ன சொல்வேன் என் நன்றிக்காய்

“நன்றியெல்லாம் எதுக்குப்பா” கண்டிப்பாக சொல்வார்கள்

எல்லாவற்றையும் விட நாம் வளர வேண்டும் என நினைத்த அவர்களின் ஆசையை நிறைவேற்றி நாம் வளர்ந்தபின் ஒரு முறையேனும் அவர்களிடம் ஆசிர் பெற்றால் அதைவிட பெரிதாக நம்மால் அவர்களுக்கு கொடுக்க முடிவதில்லை  . .

எல்லாரும் சிந்திப்போம் . .

 

மேலே சொன்ன என் ஆசிரியர்களுக்கு மட்டுமில்லாமல், அனைத்து ஆசிரியர்களுக்கு தலைவணங்குகின்றேன்,