மடியில் குழந்தை

infant

நமது பெரும் நகரங்கள் மக்கள் கூட்டத்தில் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறது. இக்காலகட்டத்தில் கிட்டதட்ட அனைத்து பேருந்துகளுமே நிரம்பி வழிகின்ற அளவிற்கு மக்கள் பேருந்து பயணத்தை கடைபிடிக்கின்றனர். அதிலும் நின்று கொண்டுவரும் இளைஞர் இளைஞிகள் அதிகம், என்றாலும் பள்ளி அல்லது கல்லூரிகள் விடும் சமயம் என்றால் அவர்களின் ஆதிக்கம் அதிகம் எனலாம்.

தங்கள் நட்பு வட்டத்தை பொறுத்து ஒரு இருக்கையில் மூன்றுபேரோ அல்லது நான்கு பேரோ அமர்ந்து கொண்டு வருவார்கள். சமத்துவத்தின் எழுதாத எடுத்துக்காட்டு இது. அந்த நிலையில் அடுத்தடுத்து ஏறும் பயணிகளுக்கு இருக்கை கிடைக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில்தான் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இருக்கையில் அமர்ந்திருக்கும் நபரிடம் கொடுக்க முற்ப்படுவர்.

வழக்கமாக பேருந்து பயணத்தின் போது அடிக்கடி நாம் பார்க்ககூடிய காட்சிதான் இது. ஆனாலும் எத்தனை பேர் அந்த “பாரத்தை” விரும்பி ஏற்றுக்கொள்கின்றனர். இங்கே நான் பாரம் என்பது என்ன என்று புரிந்திருக்கும். ஆயினும் நான் “அதை” பாரமாக நினைக்கவில்லை. நினைக்ககூடிய அந்த “ஜடங்களுக்கு” உணர்த்தவே அப்படி குறிப்பிட்டேன்.

பத்து மாதம் கருவிலே சுமந்து, பிறந்த பின்னும் தன் குழந்தையின் பிஞ்சு பாதம் தரையிலே படவேண்டாமே என்று தன் தோளிலே போட்டு தாலாட்டி பாலுட்டி வளர்த்த அந்த சிறிய மலரை, கூட்ட நெரிசலில் சிக்கி வேதனை படுத்த வேண்டாமே என்றுதானே இருக்கையில் அமர்ந்து வெட்டிகதை பேசும் நம்மிடம் தருகிறாள் அந்த தாய்.

ஒரு நிமிடம் நினைத்து பார்ப்போமா, அவள் வீட்டில் இருக்கும் நேரம் அல்லது வேலையில்லாத ஓய்வு நேரத்தில் தன் கணவன் கேட்டால் கூட அக்குழந்தை பிரிய மனமில்லாமல் கொடுக்க மறுக்கும் ஒரு தாய் தன் குழந்தையை உங்களிடம் தருகிறாள் என்றால் அவள் மனநிலையினை உணர வேண்டும் நாம்.

வேண்டுமானால் நீங்கள் அணிந்திருக்கு உடை அழுக்காகலாம் அல்லது கசங்கி போகலாம். இருந்தாலும் ஒரு பாசத்தின் அத்தியாயத்தை அடைந்த திருப்தி ஏற்ப்படும் உங்களுக்கு. உங்கள் ஆடை ஈரமாகலாம் இருந்தாலும் ஒரு மலரை முகர்ந்த சுவாசம் கிடைக்கும் உங்களுக்கு.

அப்படியே வாய்ப்பு கிடைத்து மறுப்பீர்களேயானால் அங்கே அந்த குழந்தைக்கான மடி கிடைக்கவில்லை என்பதல்ல உண்மை உங்கள் மடிக்கு குழந்தை கிடைக்கவில்லை என வருந்தப்போவது தான் உண்மை.

இனிமேல் தயவு செய்து நீங்கள் இருக்கையில் இருக்கும் போது ஒரு முறையேனும் சுற்றி பாருங்கள் அங்கே உங்கள் மடிக்கான குழந்தை இருக்கலாம். அதை ஆசையோடு அழைத்து கொஞ்சி மகிழுங்கள். அதன் மூலம் அதற்கு கிடைக்கும் இன்பத்தின் அளவை விட அந்த தாய்க்கு கிடைக்கும் சந்தோசத்தை விட உங்களுக்கு கிடைக்கும் பலனின் அளவு அதிகம்.

இனி பேருந்து பயணித்தில் ஒரு குழந்தையும் மடிக்காக ஏங்காது அல்லவா நண்பர்களே. . . .

Advertisements