கல்வி – கட்டணம் – பெற்றோர்


 

இன்னும் ஓய்ந்தபாடில்லை, பள்ளிக்கூட கட்டணங்கள் குறித்த புகார்களும் அதற்காக நடத்தப்படும் கூட்டங்களும், போராட்டங்களும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக கேட்கிறார்கள் என்ற புகார்கள் வந்த வண்ணமே உள்ளன. . .

ஏன் இந்த போராட்டங்கள் ?

அரசு ஒரு கட்டணத்தை நிர்ணயித்து விட்டது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே, சிலபல பள்ளிகள் அதை பின்பற்றாமல் இருக்கலாம் என்பதற்காக இந்த போராட்டங்கள் என்றால், அரசு ஏன் இன்னும் அந்த குறிப்பிட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. போராட்டம் நடத்துபவர்கள் பெற்றோர்களாக இருப்பின் அவர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பின் மேல் அக்கறை கொண்டு நீதிக்கான வழிகளில் அமைதியான முறையில், தங்கள் குழந்தைகளின் படிப்பு கெட்டுவிடாதபடி இந்த கட்டண அதிகரிப்பை எதிர்த்து போராட முடியும். இப்போது நடப்பது அப்படி இல்லையே.

தங்கள் போராட்டங்களை பயன்படுத்தி அந்த பள்ளியின் பெயரில் களங்கத்தையோ பள்ளியின் எதிர்கால நலனை கெடுக்கும் விதத்திலோ நடத்தப்படுகின்றன. தனது தனிப்பட்ட கோபத்தை தீர்த்து கொள்ள பள்ளியின் மீது நடத்தப்படும் போராட்டங்களே அதிகம்.

 

இதற்கெல்லாம் காரணம் என்ன?

முதலில் அரசு பள்ளிகள், அரசு சார்ந்த பள்ளிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் கவனிக்காமல் போனது துரதிஷ்டவசமானது. இவ்வகை பள்ளிகள் முறையான வகையில் கவனிக்கபடாததும் வளர்ந்து வரும் சமுதாயத்தின் தேவைகளுக்கேற்ப பள்ளிகள் வளராததுமே காரணம்.

தங்களால் கொடுக்க இயலாத கட்டணத்தையும் கொடுத்து தங்கள் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்கள், இலவச கல்வி வழங்கும் அரசு பள்ளிகளிலும் சிறு அளவிலே கட்டணங்களை வசூலிக்கும் அரசு சார் பள்ளிகளிலும் ஏன் சேர்க்க மாட்டார்கள்?. காரணம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு.

 

அரசுப்பள்ளிகளின் வளர்ச்சி

இன்று பள்ளிகளின் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று போராடும் பெற்றோர்கள் ஏன் அரசு பள்ளிகளின் வளர்ச்சி குறித்த கூட்டங்களையோ போராட்டங்களையோ நடத்துவதில்லை? பதில் தர எந்த பெற்றோரும் முன்வருவதில்லை.

அரசும், பள்ளிக்கட்டணங்களை குறைக்க வேண்டும், பாடத்திட்டங்களை மாற்ற வேண்டும் என்று கூட்டங்கள் போடுகிறது. மாறாக அரசு பள்ளிகளின் வளர்ச்சி குறித்த கூட்டங்களை, அவற்றை பொதுமக்கள் விரும்பும் வகையில் செயல்படுத்தும் விதமாகவோ கூட்டங்கள் போடுவதில்லை. இன்னும் சொல்லபோனால் இலவசமாக அரசு வழங்க விருக்கும் மடிக்கணினி பெறுகின்ற மாணவர்களில் யாரேனும் ஒருவர் தனியார் பள்ளிகளில் படித்தவராக இருந்தால் அரசு அங்கே தோல்வியைத்தழுவியது என்றே பொருள் கொள்ள வேண்டி இருக்கும்.

தனியார் பள்ளியின் கவர்ச்சி

தனியார் பள்ளிகளில் மாணவர்களை கவர வேண்டும் என்றல்ல மாணவர்களின் பெற்றோர்களை கவர வேண்டுமென்றே பல வகையான கவர்ச்சி மாயைகளை தங்கள் வளாகத்துக்குள் நிரப்பி தங்கள் வங்கி கணக்குகளை நிரப்பி கொள்கிறார்கள். எல்லாம் தெரிந்தும், அரசு பள்ளிகளையும் அதற்குரிய தனித்துவம் மிக்க, தனியார் பள்ளிகளுக்கு நிகரான, வளர்ச்சியான பள்ளிகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அதற்க்காக பெற்றோர்கள் போராட வேண்டும்

அது தவிர்த்து நாங்கள் நிர்ணயிக்கின்ற கட்டணத்தை பெற்றுக்கொண்டு நாங்கள் எதிர்பார்க்கும் விதமான கல்வியும் இன்னபிற செயல்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று கல்வி நிறுவனங்களை கட்டாயப்படுத்துவதிலும் எதிர்த்து போராடுவதிலும் எந்த அர்த்தமும் இல்லை.

 

ஊக்கப்படுத்துவது யார்?

நாம் நம் குழந்தைகளை அரசுப்பள்ளிகளிலும் அரசு சார் பள்ளிகளிலும் சேர்த்து விடுவோம், எத்தனை பெற்றோர்கள் இப்படி நினைப்பார்கள் அல்லது சேர்த்து விடுவார்கள். நாம் அப்படி செய்கின்ற வேளையில் இந்த தனியார் பள்ளிகள் தங்கள் கட்டணங்களை இயல்பாகவே குறைத்து விடுவார்கள். எத்தனை பெற்றோர்கள் இதற்க்கு சம்மதிப்பார்கள். தனியார் பள்ளிகள் என்பது ஏதோ கவுரமாக கருதும் பெற்றோர்கள் உள்ள வரை ம் ம் ம் ம் ம் .

தனியார் பள்ளிகளில் சீட் வேண்டி நிற்கும் பெற்றோர்களின் கூட்டத்தை கண்ட பின்புதானே அவர்களுக்கு அதிக கட்டணம் குறித்த நம்பிக்கை வருகிறது. இவையெல்லாவற்றையும் ஊக்கப்படுத்திய நமக்கும் நடக்கும் போராட்டங்களுக்கு என்ன சம்மந்தம் இருக்கிறது . . .

 

சமுதாயம் என்பது தனிப்பட்ட ஒரு விசயமல்ல. நாம் தான் சமுதாயம், நம் செயல்பாடுகளே சமுதாய வளர்ச்சியை தீர்மானிக்கிறது . . நமக்கான பணியாள் தான் அரசாங்கம், அதாவது நமது செயல்பாடுகளை நல்ல வழியில் நடத்தும் ஒரு பணியாள். எனவே இந்த சமுதாயத்தில் எது நடந்தாலும் அதன் முழு பொறுப்பும் நம்மையே சார்கிறது.

 

இனி என்ன செய்ய போகிறோம் . . .

இந்த சூழல் இப்படியே தொடர்ந்தால் வரும் 20 ஆண்டுக்குள் கல்வி என்பது தனியார் நிறுவனமாக மாறிவிடும் சூழல் இருக்கிறது. . அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டுமானால் அரசு தங்கள் பள்ளிகளின் மேல் பொதுமக்கள் கொண்டுள்ள எண்ணங்களை மாற்ற வேண்டும். பொதுமக்களும் தங்கள் குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும்.

 

குறிப்பு: எங்கள் ஊர் பள்ளியில் நான் மேல் நிலை வகுப்பு படிக்கும் போது எங்கள் ஊரின் மொத்த மாணவர்களில் 5 சதவிகித மாணவர்களே தனியார் பள்ளிகளில் படித்தார்கள். இன்றோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஒரு கிராமத்தின் நிலை இது என்றால் . . . மாற்ற வேண்டியது கட்டணங்களை அல்ல என்பதை அரசும் பெற்றோர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் . . . 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s