எந்திரன் சாதனை


எந்திரன் சாதனை: 20 நிமிடங்களில் 8 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

சென்னை: திரையுலகம் இதுவரை காணாத பெரும் வசூல் சாதனையைச் செய்து வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம். சென்னை அபிராமி மெகா மாலில் 20 நிமிடங்களில் 8 நாட்களுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

தமிழகத்தின் மற்ற திரையரங்குகளில் முன்பதிவு துவங்கிய ஒரு மணிநேரத்தில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவிலிருந்தே ரசிகர்கள் திரண்டு வந்து இரவு முழுக்க விழித்திருந்து காலை ஒன்பது மணிக்கு முன்பதிவு தொடங்கியதும் டிக்கெட் வாங்கிச் சென்ற காட்சியை பல தியேட்டர்களில் காண முடிந்தது.

“நிறைய தியேட்டர்களில் திரையிடுவதால் ரசிகர்கள் நெருக்கடி இருக்காது என்று நினைத்தோம். மாறாக அதிகாலையிலேயே கூட்டம் திரண்டுவிட்டது. கேட்டுக்கு வெளியில் ஏராளமான ரசிகர்கள் நிற்பதால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுவதாக போலீசார் கூறியதும், கதவை திறந்து வளாகத்தின் உள்ளே அனுமதித்தோம். கவுன்டர்கள் திறக்கும்வரை ரசிகர்கள் அமைதியாக காத்திருந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது” என ஒரு தியேட்டர் காம்ப்ளக்ஸ் நிர்வாகி குறிப்பிட்டார்.

பலர் ரசிகர் மன்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். சத்யம் காம்ப்ளக்சில் மாணவ மாணவிகள், ஐ.டி துறை இளைஞர்கள் அதிகமாகக் காணப்பட்டனர். அருகில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள எஸ்கேப் சினிமாவின் அனைத்து கவுண்டர்களிலும் எந்திரன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதால் வெறும் 10 நிமிடத்தில் ஒரு வாரத்துக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுவிட்டன. இதனால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

உதயம், காசி தியேட்டரில் இளம் ரசிகர்கள் கும்பல் கும்பலாக நின்று கோஷமிட்டபடி காத்திருந்தனர். இங்கு அதிகாலை 3 மணியிலிருந்தே கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் வரத் துவங்கியது குறிப்பிடத்தக்கது.

வரிசையில் காத்திருந்த பெண்கள்

ரஜினி படங்களுக்கு பெண் ரசிகைகளின் ஆதரவு எக்கச் சக்கம் என்றாலும், முதல் நாள் முதல் ஷோ பார்க்க சற்று தயங்குவார்கள். காரணம், கட்டுக்கடங்காமல் குவியும் ஆண் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்க வேண்டாமே என்றுதான். ஆனால் இந்த விஷயத்திலும் எந்திரன் புதிய சாதனையைப் படைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சென்னையின் பல திரையரங்குகளில் பெண்கள் ஏராளமானோர் காலையிலிருந்தே டிக்கெட்டுக்காகக் காத்திருந்தனர். சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து காத்திருந்து முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டை வாங்கிச் சென்றனர்.

ஆல்பட் மற்றும் உதயம் திரையரங்குகளில் ஏராளமான பெண்கள் டிக்கெட் எடுக்க வந்திருந்தனர்.

அபிராமியில் மட்டும் 4 மணிநேரத்தில் ரூ 50 லட்சம் வசூல்!

அபிராமி தியேட்டர் காம்ப்ளக்சில் நேரடி முன்பதிவும் ஆன்லைன் முன்பதிவும் அசுர வேகத்தில் நடந்ததாக ரசிகர்கள் கூறினர்.

இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர் அபிராமி ராமநாதன் இப்படிக் கூறுகிறார்:

“முன்பதிவு தொடங்கிய 4 மணி நேரத்தில் 50 லட்ச ரூபாய் வசூலாகி இருக்கிறது எங்கள் வளாகத்தில். இதுவரை எந்த படத்துக்கும் கிடைத்திராத வசூல் இது. ஒரு படத்தின் முன்பதிவுக்கு இத்தனை போட்டியா என்பதை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. எங்கள் வளாகத்தில் மூன்று தியேட்டர்களில் ‘எந்திரன்’ திரையிடுகிறோம். முதல் 7 நாட்கள் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. ‘சிவாஜி’ படத்துக்கு கிடைத்ததைவிட பல மடங்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து படங்களின் சாதனைகளையும் எந்திரன் முறியடிக்கும்’ என்று அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

இவர் சென்னை தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

40 வருடங்களில் காணாத சாதனை!

கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரத்தின் மகன் கணேஷ், ‘முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரண்டு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன. ஆன்லைனில் அதிக ரசிகர்கள் வந்ததால், சர்வர் ஹேங்காகி விட்டது. 40 வருடத்தில் இப்படியொரு வரவேற்பை எந்த படத்துக்கும் பார்த்ததில்லை’ என்றார்.

கமலா மட்டுமல்ல, அபிராமி உள்ளிட்ட பல திரையரங்குகளின் இணையதளங்கள் நேற்று முழுக்க முடங்கிப்போயின.

சத்யம் தியேட்டர் காம்ப்ளக்ஸ் துணை தலைவர் முனி கண்ணையா, ‘சென்னை மற்றும் புறநகர்களில் 70க்கு மேற்பட்ட தியேட்டர்களில் ‘எந்திரன்’ திரையிடப்படும் நிலையில் இவ்வளவு பெரிய கூட்டத்தை முன்பதிவில் எதிர்பார்க்கவில்லை. ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது,’ என்றார்.

கோவையில் கோலாகலம்

கோவை கங்கா, யமுனா தியேட்டர்களில் காலை 6.30க்கு ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். தொடர்ந்து கூட்டம் அதிகரித்ததால், 8 மணிக்கே வினியோகம் துவங்கியது. பத்தே நிமிடங்களில் 500 டிக்கெட்டுகள் விற்பனையாகின.

ரத்தினபுரி தங்கமகன் ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஆயிரம்வாலா பட்டாசு வெடித்து கொண்டாடினர். மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உட்பட முக்கிய நகரங்கள் அனைத்திலும் இதே போன்ற உற்சாகத்துடன் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

வேலூர், திருப்பத்தூரில் புதிய சாதனை

வேலூர் மற்றும் திருப்பத்தூர் நகரங்களில் பொதுவாக எந்தப் படத்துக்கும் முன்பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்துக்கான டிக்கெட்டுகள் அடுத்த 8 நாட்களுக்கு ரிசர்வ் செய்தயப்பட்டுள்ளது புதிய வரலாறு என்கிறார்கள். திருப்பத்தூர் மீனாட்சி திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் கூடி, டிக்கெட்டுக்குக் காத்திருந்தனர்.

அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட்டுகள்

சென்னையில் அனைத்து இடங்களிலும் அரசு நிர்ணயித்துள்ள விலைக்கே டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. ஆல்பட் திரையரங்கில் ரூ 50க்கான டிக்கெட்டுகளும் ரசிகர்களுக்குத் தரப்பட்டன. தேவி, சத்யம் வளாகங்களில் டிக்கெட்டின் விலை அதிகபட்சம் ரூ 120 மட்டுமே.

புறநகர்ப் பகுதிகளில் பெரும்பாலான திரையரங்குகள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே முன்பதிவு கூப்பன்களை விற்பனை செய்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

எந்திரன் டிக்கெட்டுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினி சில தினங்களுக்கு முன் கேட்டுக் கொண்டது நினைவிருக்கலாம்.

எந்திரன் முன்பதிவு வீடியோ:

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s