இந்திய கிரிக்கெட்


 

2007ஆம் ஆண்டின் வீழ்ச்சிகளுக்குப் பிறகு, அனில் கும்ளே தலைமையிலும் எம்.எஸ்.தோனி தலைமையிலும், இந்திய அணி மிகப்பெரிய அளவிலான எழுச்சிகளைக் கண்டது. அந்த எழுச்சிகளில் முக்கிய பங்கு வகித்த அனில் கும்ளேயும், இந்திய கிரிக்கெட்டின் மனப்போக்கை மாற்றிய தாதா கங்கூலியும் ஓய்வு பெற்றது இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட்டின் முக்கிய நிகழ்வுகளாக கருதலாம்.

இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக பிரையன் லாராவின் உலக சாதனையை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்து சாதனை புரிந்ததும் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாகும்.

2008ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்திய கிரிக்கெட் அனில் கும்ளே தலைமையில் சோதனைகளை சந்திப்பதில் துவங்கியது. மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா தோல்வி அடைய, புதிய ஆண்டான 2008 ஜனவரியில் சிட்னியில் அடுத்த டெஸ்ட் துவங்கியது. 121 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய ஆஸ்ட்ரேலியா நடுவர்களின் மோசடியான தீர்ப்புகளினால் சைமன்ட்சின் சதம் மூலம் 463 ரன்களை எட்டியது. நடுவர் மோசடி அன்றே துவங்கியது.

 

 

இந்தியா பேட்டிங்க் செய்ய களமிறங்கிய போது திராவிட் துவக்கத்தில் களமிறங்கி 53 ரன்களை எடுத்தார். ஆனால் அன்றைய தினத்தின் சிறப்பான, மகத்தான ஆட்டத்தை வெளிப்படுத்தி தூங்கிக் கொண்டிருந்த இந்திய அணியின்ரை உசுப்பி விட்டவர் லக்ஷ்மண். இவர் 142 பந்துகளில் 109 ரன்களை 18 பவுண்டரிகளுடன் விளாசினார்.

3ஆம் நாள் சச்சின் டெண்டுல்கர் இந்த ஆண்டின் துவக்கத்தில் மிகச்சிறந்த இன்னிங்சை ஆடி 154 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமலே இருந்தார். ஆனால் அன்றைய தினம் சூடு பிடித்தது ஹர்பஜன் மீதான நிறவெறிக் குற்றச்சாட்டு. ஹர்பஜன், பிரட் லீயை தொட்டு எதோ கூறப்போக, சைமன்ட்ஸ் உடனடியாக மூக்கை நுழைத்து “உனக்கு ஆஸ்ட்ரேலிய அணியில் நண்பர்கள் இல்லை” என்று கூற, பதிலுக்கு ஹர்பஜன் “குரங்கு” என்று திட்டியதாக திரிக்கப்பட்டது.

 

 

இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கும்போதே கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலிய அணிக்கு சாதகமாக மேற்கிந்திய நடுவர் ஸ்டீவ் பக்னர் சில தீர்ப்புகளை வழங்கி இந்திய அணியின் தோல்விக்கு பெரிய காரணமானார். கடைசி ஓவரில் கிளார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தமோசடி வெற்றியை ஆஸ்ட்ரேலியா பெற்றது. குறைந்தது 20 மோசடி தீர்ப்புகளையாவது அந்த போட்டியில் நடுவர்கள் செய்தனர். அனைத்தும் இந்திய அணிக்கு எதிராக திரும்பியது. அனைத்தையும் விடக்கொடுமை இது போன்ற ஒரு வெற்றியை பெற்று விட்டு ஆஸ்ட்ரேலிய வீரர்கள் போட்ட குதியாட்டம் காண சகிக்க முடியாத ஒன்று. அதன் பிறகு ஆஸ்ட்ரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு பல்வேறு பத்திரிக்கைகள், ஊடகங்களிலிருது கடுமையாக எதிர்ப்புகள் வர ஆஸ்ட்ரேலிய வீழ்ச்சியின் துவக்கமாக இது மாற, இந்திய அணியின் எழுச்சியுமாகவும் அமைந்தது

அதன் பிறகு ஆஸ்ட்ரேலியாவின் கோட்டையான பெர்த் டெஸ்டில் இந்தியா சிட்னி தோல்விக்கு பழி வாங்கும் விதமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த 2008-இல் முதல் வெற்றியை ஈட்டியது. ஆஸ்ட்ரேலியாவிற்கு வீழ்ச்சி துவங்கியது. முக்கியமாக ஆஸ்ட்ரேலிய அணியின் சூப்பர் ஸ்டார் விக்கெட் கிப்பர்/அதிரடி பேட்ஸ்மென் ஆடம் கில்கிறிஸ்ட் ஓய்வு அறிவித்தார்.

ஆஸ்ட்ரேலிய அணி இந்த ஆண்டின் துவக்கத்தில் பெர்த் டெஸ்டை இழந்து துவங்கியது. 2008 முடிவில் அதே பெர்த் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் 414 ரன்கள் இலக்கை நிர்ணயித்து விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தோல்வியைத் தழுவியது. ஸ்மித், டீவிலியர்ஸ், டுமினி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால். ஆஸ்ட்ரேலியா டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதற்கு முன்பு 418 ரன்கள் இலக்கை இதை விட பலமான ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக மேற்கிந்திய அணி எடுத்து ஆஸ்ட்ரேலிய பல்லைப் பிடுங்கியது. தற்போது தென் ஆப்பிரிக்க அணி ஏற்கனவே இந்திய அணியால் பல் பிடுங்கப்பட்ட ஆஸ்ட்ரேலிய அணிக்கு இன்னுமொரு கரியைப் பூசியுள்ளது.
டெஸ்ட் தொடரை இந்தியா 1- 2 என்று தோற்றாலும், ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற பாரம்பரியமான முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் சிட்னி,பிரிஸ்பேன் ஆகிய இடங்களில் நடந்த முதல் இரண்டு இறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவின் புதிய எழுச்சியை தோனி தனது தலைமயின் கீழ் அறிவித்தார்.

அந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடர் ஆஸ்ட்ரேலியாவில் நடைபெறும் கடைசி முத்தரப்பு ஒரு நாள் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. 1975களுக்கு பிறகு தொடங்கப்பட்ட இந்த முத்தரப்பு தொடர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. நாளடைவில் 3வது அணி நல்ல அணியாக அமையாமல் சொத்தை அணிகளாக அமைந்ததால் அதற்கு வரவேற்பு குறைந்தது. இதனால் ஆஸ்ட்ரேலியா அதனை முடித்துக் கொள்ள முடிவு செய்தது. இந்த ஆண்டில் கிரிக்கெட்டில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வாகும் இது.

 

 

ஆஸ்ட்ரேலியாவில் பாரம்பரிய ஒரு நாள் தொடர் நிறுத்தப்படுகிறது. ஆனால் அதே ஆண்டில் இந்திய கிரிக்கெட்டில் ஒரு முக்கியத் திருப்பம் நிகழ்ந்தது. அதாவது இங்கு இந்தியன் பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் என்ற 1970ஆம் ஆண்டுகளில் கெர்ரி பேக்கர் தனியார் கிரிக்கெட் ஏற்படுத்திய அலை போன்று ஒன்று எழுச்சி பெற்றது. ஷாரூக்கான், பிரீத்தி ஜிந்தா, விஜய் மல்லையா உள்ளிட்ட பிரபலங்கள் உலகின் முன்னணி வீரர்கள் மீது பெரும் முதலீட்டை செய்தனர். தோனியும், சைமன்ட்சும் ஏலத்தில் அதிக விலை போயினர். இந்திய கிரிக்கெட் உலகம் பணம் காய்க்கும் மரமாக மாறியது 2008ஆம் ஆண்டின் சிறப்பம்சமாகும். ஐ.பி.எல். போட்டிகளும் போட்டித் தன்மையின் உச்ச கட்ட விறுவிறுப்புடன் நடைபெற்று, மக்கள் அதற்கு அமோக வரவேற்பு அளிக்க அது 2008ஆம் ஆண்டின் மெகா ஹிட் ஆனது.

ஷேன் வார்னும், யூசுப் பத்தானும், கிளென் மெக்ராவும், சேவாகும், ஹெட்யனும் தோனியும், கங்கூலியும் அக்தரும் ஒரே அணியில் சவாலான கிரிக்கெட்டை விளையாடியதைக் கண்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வங்கதேசத்தில் நடைபெற்ற கிட் ப்ளை கோப்பை ஒரு நாள் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணியிடம் இறுதிப் போட்டியில் தோல்வி தழுவுகிறது. அதன் பிறகு ஆசியக் கோப்பை போட்டிகளில் இந்தியா பங்கேற்றது

இலங்கை கிரிக்கெட்டில் புரியாத புதிர் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டிற்குள் நுழைந்து பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதியில் இந்தியாவை தந்து புதிர் பந்து வீச்சின் மூலம் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தோல்வியடையச் செய்கிறார். இலங்கை ஆசியக் கோப்பையை வெல்கிறது.

அதன் பிறகு இந்திய அணி இலங்கை செல்கிறது. தோனி தனக்கு ஓய்வு தேவை என்று அந்தத் தொடரில் விளையாட மறுக்கிறார். தினேஷ் கார்த்திக் தனக்கு மீண்டும் கிடைத்த வாய்ப்பை தக்க வைக்காமல் தோல்வி அடைகிறார். முதல் டெஸ்டில் இந்திய அணி முரளிதரன், அஜந்தா மென்டிசிடம் வீழ்ந்தது.

 

 

இரண்டாவது டெஸ்டில் முதலில் பேட் செய்தது இந்தியா. அன்றைய தினம் சேவாக் விளையாடிய ஆட்டம் இந்த ஆண்டு உலக கிரிக்கெட்டில் விளையாடப்பட்ட மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்றால் அது மிகையாகாது. 201 ரன்களை எடுத்த சேவாக் சுனில் கவாஸ்கருக்குப் பிறகு துவக்க வீரராக களமிறங்கி, இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து சாதனை படைத்தார்

 

அந்த தொடரை இந்தியா 1- 2 என்று தோல்வி தழுவ, ஒரு நாள் போட்டிகளுக்கு தோனி மீண்டும் அணித் தலைவராக திரும்பி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 3- 2 என்று வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையில் ஒரு நாள் தொடரை முதன் முதலில் வென்று சாதனை படைத்தது.
அதன் பிறகு ஆஸ்ட்ரேலியா அணியின் இந்திய வருகை. பெரிய அளவிற்கு விளம்பரப்படுத்தப்பட்டது. ஆஸ்ட்ரேலியாவில் கண்ட தோல்விகளுக்கும், இழிவுகளுக்கும் மிகப்பெரிய அளவில் பழி வாங்க இந்தியா காத்திருந்தது.

பெங்களூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ரிக்கி பாண்டிங், இந்திய மண்ணில் இன்னிங்சிற்கு 12 ரன்கள் என்ற சராசரியை மாற்றி அமைக்கும் விதமாக அபாரமான சதத்தை எடுத்தார்

சிட்னி டெஸ்ட் இறுதி நாள் போலவே இம்முறையும் பெங்களூரில் வீழ்த்தி விடுவோம் என்ற பான்டிங்கின் கனவு நிறைவேறவில்லை. சச்சின், லக்ஷ்மண், தோனி ஆகியோரது ஆட்டங்களால் பெங்களூர் டெஸ்ட் டிரா ஆகிறது. அனில் கும்ளே காயமடைகிறார். இதனால் அடுத்ததாக நடைபெற்ற மொஹாலி டெஸ்டிற்கு தோனி அணித் தலைமை பொறுப்பேற்கிறார்.

அந்த டெஸ்டிற்கு அனில் கும்ளேயிற்கு பதிலாக மற்றொரு லெக்ஸ்பின்னரான அமித் மிஷ்ரா அறிமுகமாகிறார். அவர் அந்த டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இஷாந்த் ஷர்மாவும், ஜாகீர் கானும் அபாரமான முறையில் ஆட்ட்த்தின் 12ஆவது ஓவர் முதலே பந்துகளை ரிவர் ஸ்விங் செய்து ஆஸ்ட்ரேலிய அணியை திக்குமுக்காட வைத்தனர்.

 

அதுவும் கடைசி நாள் ஜாகீர் கானின் பந்துகள் பேசின. ஆஸ்ட்ரேலியாவின் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் வந்தவுடனேயே வீழ்த்தி இந்தியா 1- 0 என்று முன்னிலை பெற்றது.

டெல்லி டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக இந்திய அணியில் இரண்டு பேட்ஸ்மென்கள் இரட்டை சதம் எடுத்தனர். கம்பீரும், லக்ஷ்மணும் இரட்டை சதம் எடுத்ததும் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. அந்த போட்டி டிரா ஆகிறது. இந்த போட்டிக்கு அமித் மிஷ்ரா நீக்கப்பட்டு அனில் கும்ளே மீண்டும் அணித் தலைமை பொறுப்பேற்றார். இந்த டெஸ்டில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய கும்ளே காயம் காரணமாக பந்து வீச முஇயாமல் போனது. இதனால் சேவாக் அதிக ஓவர்களை வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தியாவின் மிகச்சிறந்த பந்து வீச்சாளரான அனில் கும்ளே ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 600க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய கும்ளே இந்தியாவின் டெஸ்ட் வெற்றிகள் அனைத்திலும் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், கங்கூலி போல் அனில் கும்ளேயும் ஒரு பதிலீடு செய்யப்பட முடியாத ஒரு வெற்றி பந்து வீச்சாளராக இந்தியாவிற்கு திகழ்ந்தர். இந்த டெஸ்ட் தொடர்தான் கடைசி என்று கங்கூலி அறிவித்திருந்த நிலையில் அவருக்கு முன்னதாகவே கும்ளே முடிவு எடுத்து ஓய்வு பெற்றார்.
நாக்பூர் டெஸ்டில் சச்சின் டெண்டுல்கர் தனது 40ஆவது சதத்தை எடுத்ததோடு பிரைன் லாராவின் அதிக டெஸ்ட் கிரிக்கெட் ரன்கள் என்ற சாதனையை முறியடித்து 11,955 ரன்கள் எடுத்து உலக சாதனையாளராக ஆனார். சச்சின் 12,000 ரன்களை கடந்ததும் இந்த டெஸ்ட் போட்டியில்தான். கங்கூலி இரண்டாவது இன்னிங்சில் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும் பிராட் மேன் போல் தனது கடைசி இன்னிங்சில் ரன் எடுக்கவில்லை என்றே பலரும் அவரை புகழ்ந்தனர்.

இந்தியா நாக்பூர் டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று கங்கூலிக்கு சிறந்த பரிசை அளித்தது. கங்கூலி ஓய்வு பெற்றார். இந்திய கிரிக்கெட்டின் இரண்டு சகாப்தங்களான கும்ளே, கங்கூலி ஆகியோர் ஓய்வு பெற்றனர். ஒருவர் இந்தியாவின் தலை சிறந்த பந்து வீச்சாளர், மற்றொருவர் இந்தியாவின் தலை சிறந்த அணித் தலைவர்.

இந்த இரண்டு மிகப்பெரிய ஓய்வுகளுக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்தை சந்தித்தது. ஒரு நாள் போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்தாத இங்கிலாந்து 5- 0 என்று தோல்வி அடைகிறது. யுவ்ராஜ் சிங் மீண்டும் தனது பலத்தை நிரூபித்து டெஸ்ட் போட்டிகளுக்கு கங்கூலி இடத்திற்கு வருகிறார்.
இதற்கிடையே மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுகிறது. அதிர்ச்சியடைந்த இங்கிலாந்து அணி நாடு திரும்புகிறது. அதன் பிறகு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு குழு இங்கு வந்து மாற்றியமைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி மைதானங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு பச்சைக் கொடி காட்டினர். இங்கிலாந்து சென்னைக்கு வருகிறது.

4-ஆம் நாளின் மதிய நேர ஆட்டம் வரை இங்கிலாந்து வெற்றி பெற்றுவிடும் என்ற சூழ் நிலை, 386 ரன்கள் இலக்கை எதிர்த்து இந்தியா களமிறங்கிய போது மாறுகிறது. மாற்றியவர் சேவாக். அதிரடி 83 ரன்களை எடுத்து இனிமேல் டிரா செய்ய இந்தியா விளையாட முடியாது என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்தினார் சேவாக்.

 

மறு நாள் சச்சின் டெண்டுல்கர் எடுத்த வெற்றிச் சதம் அவரது வாழ் நாளின் முக்கிய சதமானதோடு, இந்த ஆண்டின் மிகச்சிறந்த சதம் என்ற பெருமையையும் பல்வெறு தரப்பினரிடமிருந் பெற்றது.
சென்னை வெற்றியும், தென் ஆப்பிரிக்க அணி 414 ரன்கள் எடுத்து பெர்த்தில் பெற்ற வெற்றியும் இனிமேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4-வது இன்னிங்சில் பாதுகாப்பான வெற்றி இலக்கு எது என்பதை மறு பரிசீலனை செய்யும் சூழலை உருவாக்கியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டு நிகழ்ந்துள்ள மிகப்பெரிய திருப்பு முனையாக இதனைக் கருதலாம்.

2008ஆம் ஆண்டு புதிய உச்சத்தை இந்தியா பெற்று மேலும் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகையில், ஆதிக்கம் செலுத்தி வந்த ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட்டின் எதிர்காலம் மங்கலாகி வருகிறது. இந்த வீழ்ச்சியை துவக்கி வைத்தது இந்திய அணியே என்ற வரையில் 2008ஆம் ஆண்டு இந்தியா தனது கிரிக்கெட்டிற்கு மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டிற்கும் மிகப்பெரிய நன்மையைச் செய்துள்ளது என்று நாம் பெருமைப்படலாம்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s