ரஜினிக்காக சக்தி நடத்திய யாகம்


  

கடந்த 12_ம்தேதி காலை பத்து மணி. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடைக்காட்டூர் என்ற குக்கிராமத்தில் உள்ள சித்தர் கோயிலில் வந்து நின்றது ஒரு ஸ்கார்பியோ கார். அந்த காரில் இருந்து இறங்கி அமைதியாக கோயிலுக்குள் நுழைந்தவர் வேறு யாருமில்லை.சத்தியநாராயணா.

 

சூப்பர் ஸ்டார் ரஜினியால் மன்றப் பொறுப்பில் இருந்து கழற்றிவிடப்பட்டார் என்றும், ரஜினிக்கும் அவருக்கும் தற்போது ஏழாம் பொருத்தம் என்றும் சத்திய நாராயணாவைப் பற்றி பரபரப்புச் செய்திகள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கும் நிலையில், சத்தியநாராயணா ரஜினியின் பிறந்தநாளும் அதுவுமாக திடுதிப்பென இடைக்காட்டூர் சித்தர் கோயிலுக்கு வந்தது அங்கிருந்த சொற்ப பக்தர்களுக்கும் திகைப்பைத் தந்தது.

 

வயல்வெளிகளுக்கு நடுவில் எந்த  அடிப்படை வசதியும் இல்லாத அந்த குட்டியூண்டு கோயிலில் சுமார் ஐந்து மணிநேரம் தங்கியிருந்து, ரஜினி மற்றும் லதா பெயரில் யாகம் நடத்திவிட்டு, அன்று மதியம் முந்நூறு பேருக்கு அன்னதானமும் செய்திருக்கிறார் சத்தி. ரஜினி பிறந்தநாளில் பிரபல சித்தர் கோயிலுக்கு வந்து ரஜினிக்கும்  அவரது மனைவிக்கும் யாகம் செய்ததன் மர்மம் என்ன?

அதைத் தெரிந்து கொள்ள உடனே இடைக்காட்டூருக்குப் புறப்பட்டோம்.

 

மதுரை-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் முத்தனேந்தல் என்ற சிற்றூரின் வடப்புறமாகப் பிரியும் சாலையில் மூன்றாவது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இடைக்காட்டூர். இந்த ஊரில் பிறந்து வளர்ந்து திருவண்ணாமலையில் ஜீவசமாதி ஆனவர்தான் இடைக்காட்டுச் சித்தர். இடைக்காடர் என்று அழைக்கப்படும் அவர் பதினெட்டுச்சித்தர்களில் தனித்தன்மைவாய்ந்தவராம்.

 

இடைக்காட்டூர் கோயிலில் ஆரம்ப காலத்தில் ஒரே திசையில் பார்த்துக்கொண்டிருந்த நவகிரகங்களை திசைக்கொன்றாகப் பிரதிஷ்டை செய்தவர் இந்த இடைக்காடர்தான். அதுதவிர அறுபது தமிழ் வருடங்களுக்கும் தனித்தனியாக வெண்பாக்கள் எழுதியவர் இவர். அதோடு தமிழில் வெளியாகும் வாக்கியப் பஞ்சாங்கம் இவர் அருளிய பாடலோடுதான் தொடங்குமாம். அந்தப் பாடல்களில் அந்தந்தத் தமிழ் வருடத்தில் வரக்கூடிய இயற்கைச் சீற்றம், பஞ்சம், மழை, சுபிட்சம் ஆகியவற்றையும் மிகத் துல்லியமாகக்கணித்துசொல்லியிருக்கிறாராம்இடைக்காடர்.

 

அப்படி நவகிரக கோயில் என்று பெயர் கொண்ட அந்தச் சிறிய கோயிலில் மூலவரே நவகிரகங்கள்தானாம். கடந்த பத்தாண்டுகளாக திருவாதிரை பூஜையும், கடந்த ஐந்து மாதங்களாக பௌர்ணமி பூஜையும் நடந்து வருகிறது. அந்தக் கோயிலில்தான் 12-ம்தேதி நடந்த பௌர்ணமி பூஜையில் கலந்துகொண்டு யாகமும் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறார் சத்தியநாராயணா.

 

சென்னையிலிருந்து 12-ம்தேதி அதிகாலை சத்தியஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனர் தியாகராஜனுடன் விமானம் மூலம் மதுரை வந்த சத்தியநாராயணா, அங்கிருந்து காரில் பரமக்குடி வந்து லாட்ஜ் ஒன்றில் தங்கியிருக்கிறார். அங்கே தனக்கு நெருக்கமான மாவட்ட நிர்வாகிகளை மட்டும் வரவழைத்துப் பேசிய சத்தியநாராயணா, `நான் வந்த விஷயமோ, நோக்கமோ வேறு எக்காரணம் கொண்டும் வெளியில் கசியக் கூடாது. குறிப்பாக பத்திரிகையாளர்களுக்குத் தெரியக் கூடாதுஎன்று கூறியிருக்கிறார். வெள்ளி, சனி ஆகிய இரண்டுநாட்கள் அவர் பரமக்குடியில் தங்கியிருந்தும் அவரது விசிட் அவரது விசுவாசிகளால்பொத்திவைக்கப்பட்டிருக்கிறது.

 

12-ம்தேதி காலை பத்து மணியளவில் இடைக்காட்டூர் சித்தர் கோயிலுக்கு வந்து சேர்ந்த சத்தியநாராயணா, அங்கே ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாகசாலையில் தியாகராஜனுடன் அமர்ந்தாராம். அதன்பிறகு நடந்தவற்றை அந்தக் கோயில் அர்ச்சகர் நம்மிடம்விவரித்தார்.

 

ஏறத்தாழ இரண்டு மணிநேரம் நடந்த அந்த யாகத்தில், சத்தியநாராயணா பயபக்தியுடன், முழு ஈடுபாட்டுடன் அமர்ந்திருந்தார். `யாருக்காக யாகம்? அவர்களது பெயர், நட்சத்திரங்களைக் கூறுங்கள்என்று யாகம் நடத்தியவர் கேட்டபோது, `ரஜினிகாந்த், திருவோண நட்சத்திரம், லதா ரஜினிகாந்த், மகம் நட்சத்திரம்என்று சத்தியநாராயணா கூறினார். யாகம் மிக எளிமையாக நடந்து முடிந்த பின், கோயிலுக்குள் நடந்த அன்னதானத்தில் அவரே எல்லோருக்கும் உணவு பரிமாறினார். பிற்பகல் மூன்று மணிக்கு அவர் புறப்பட்டுப் போகும் வேளையில் எங்களிடம், `கோயில் சிறியதாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறதுஎன்று சொல்லிவிட்டுச் சென்றார்என்றார் அந்தஅர்ச்சகர்.

 

நாம் முத்துராமலிங்கம் என்பவரிடம் பேசியபோது அவர், “இந்தியாவிலேயே முதலில் அமைந்த நவகிரக கோயில் இதுதான். ஒரு முழுபௌர்ணமி நாளில் இடைக்காடர் இந்தக் கோயிலில் நவகிரகங்களை மாற்றியமைத்ததால் இங்கே பௌர்ணமி நாளில் நடக்கும் பூஜை ரொம்ப விசேஷம். இடையில் தடைப்பட்டுப் போன அந்த பௌர்ணமி பூஜை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாலநமச்சி என்பவர் செய்த பொருளுதவியால் இப்போது மீண்டும் தொடர்கிறது. அந்த பாலநமச்சிதான் இந்தக் கோயிலின் சிறப்பைப் பற்றி சத்தியநாராயணாவிடம்  கூறி அவரை அழைத்து வந்திருக்கிறார்என்றார் நெகிழ்வுடன்.

 

அந்த நவகிரக சித்தர் கோயிலை விட்டுக் கிளம்பும் முன் சத்தியநாராயணா, தன் சொந்தச் செலவில் கோயிலைச் சுற்றி பக்தர்கள் வலம் வர வசதியான ஏற்பாட்டைச் செய்து தருவதாகக் கூறியிருக்கிறார். அவரிடம் `அன்னதான மண்டபம்ஒன்றையும் கட்டித்தருமாறு கோரிக்கை வைத்த கோயில் பக்தர்கள், அடுத்து வைத்த இன்னொரு கோரிக்கைதான்வித்தியாசமானது.

 

`ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமியன்று  பதினெட்டு சித்தர்களும் இங்குள்ள நவகிரகங்களை வழிபட வருவதால் அந்த நாளில் கோயிலில் அதிர்வுகள் (வைபரேஷன்) அதிகமாக இருக்கும். ஆகவே வரும் சித்ரா பௌர்ணமியன்று சூப்பர் ஸ்டாரை இந்தக் கோயிலுக்கு அழைத்து வாருங்கள்என்பதுதான் பக்தர்கள் வைத்த கோரிக்கை. அதற்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாகச் சென்று விட்டாராம் சத்தி.

 

சத்தியநாராயணாவின் இந்தக் கோயில் விசிட், ரஜினி ரசிகர்கள் சிலருக்கு சிறிய சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தலைவரும் தளபதியும் தங்களுக்குள் `லடாய்என்பது போல நாடகமாடுகிறார்களா? என்ற சந்தேகம்தான் அது. எது உண்மை என்பது அந்த இடைக்காட்டூர் சித்தருக்கே வெளிச்சம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s