இதோ கிறிஸ்துமஸ்


கிறிஸ்துமஸ் வந்து விட்டது பண்டிகையை கொண்டாட உலகமே தயாராகிக் கொண்டிருக்கிறது!

உலகெங்கும் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகைகளும் முக்கியமானது கிறிஸ்துமஸ்.

மனிதர்களை ரட்சிப்பதற்காகத் தேவமைந்தன் ஒரு சுடராக தொழுவத்தில் தோன்றிய நாள்.

 

கிறிஸ்துமஸ் என்றாலே கொண்டாட்டம், உற்சாகம், சந்தோஷம்…

உலகெங்கிலும் இதில் வித்தியாசமே இல்லை. ஆனால் கலாசாரத்துக்குக் கலாசாரம், நாட்டுக்கு நாடு கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறுசிறு வித்தியாசங்களுடன் கொண்டாடுகிறார்கள். அடிப்படை உணர்வு ஒன்றுதான்.

 

உலகெங்கும் வீடுகளிலும், தேவாலயங்களிலும் நட்சத்திரங்களும்”, விளக்குகளும் பூத்து ஜொலிக்கும். கிறிஸ்துமஸ் மரங்கள் மினுக்கும் விளக்குகளை காய்த்துச் சிரிக்கும். தேவபுதல்வனை வரவேற்கும் பாடல்கள் ஒலிக்கும். இனிமை பூத்துக் கிடக்கும் இந்தக் குளிர்கால வேளையில் எங்கெங்கும் ஓர் உற்சாகம் மிதக்கும்.

 

உச்சக்கட்ட கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தின மாலையில்தான். அப்போது மக்கள் புத்தாடை பூண்டு பிரார்த்தனை செய்கிறார்கள். இயேசுவைப் போற்றிப் பாடுகிறார்கள். ஆடுகிறார்கள். வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

 

கிறிஸ்துமஸ் தினத்தன்று கேக்போன்ற இனிப்பு களுடன் விருந்தும், பரிசுப் பொருட்கள் பரிமாறலுமாக உள்ளங்கள் பூரித்துப் பொலிவு பெறுகின்றன. இப்போதே விதவிதமான கேக்குகளை தயாரிக்கத் தொடங்கி விட்டார்கள். நூற்றாண்டுகளாக இந்தக் கொண்டாட்டம், இந்த உற்சாகம் தொடர்ந்து வருகிறது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தினரும் கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பேரார்வத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில் உள்ள `சர்ச் ஆப் நேட்டிவிட்டியில் எளிமையான, இனிமையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெறுகிறது. மேற்குக் கரையில் உள்ள சிறுநகரான பெத்லகேமில் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் இருந்து வரும் கிறிஸ்தவர்களும், உள்ளூர் மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையைச் சேர்ந்து கொண்டாடுகிறார்கள். இதையொட்டி சர்ச் ஆப் நேட்டிவிட்டி”, வண்ண வண்ணக் கொடிகளாலும், அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்படுகிறது. நாடகங்களுடன் கூடிய ஊர்வலம் ஒன்றும் நடத்தப்படுகிறது. இதில், அலங்கரிக்கப்பட்ட குதிரைகளில் அமர்ந்தவர்கள் முன்னிலை வகித்துச் செல்கிறார்கள். பெருவாரியான மக்கள், மத குருக்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கிறார்கள். தேவாலயத்தில் தெய்வக் குழந்தையின் சொரூபமும், அதன் பிறப்பைக் குறிக்கும் வெள்ளி நட்சத்திரமும் அமைந்திருக்கும் இடத்தில் ஊர்வலம் முடிவடைகிறது.

 

கிறிஸ்துமஸை ஒட்டி பெத்லகேமில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்துவரின் இல்லத்திலும் முன்கதவில் சிலுவைதீட்டப்படுகிறது. தொழுவத்தில் இயேசு பிறப்புக் காட்சியை உருவாக்கி வைக்கிறார்கள்.

 

உலகில் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கு கம்யுனிச நாடான சீனா, இஸ்லாமிய நாடான ஈரான் போன்றவையும் கூட விதிவிலக்கல்ல.

இயேசு அவதரித்தபோது இருந்த முப்பெரும் மனிதர்கள் வசித்த நாடாக ஈரான் கருதப்படுகிறது. ஈரானிய கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸை ஒட்டி டிசம்பர் 1-ம் தேதி முதல் நோன்பு இருக்கின்றனர். இக்காலத்தில் அவர்கள் அசைவம் உண்பதில்லை. இது சிறுநோன்புஎனப்படுகிறது. (ஈஸ்டருக்கு முந்தைய ஆறு வார காலத்தில் அவர்கள் பெருநோன்புநோற்கின்றனர்.) கிறிஸ்துமஸ் அன்று தடபுடலான விருந்து உண்டு.

 

சீனாவில் கிறிஸ்தவம், அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்ட மதமல்ல. ஆனால் இங்கும் ஆண்டுக்காண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.

 

கிறிஸ்துமஸ் காலத்தில் வெள்ளைத் தாடி, சிவப்புத் தொப்பி-ஆடையில் வரும் சான்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா, இரவில் யாருக்கும் தெரியாமல் பரிசுப் பொருட்களை வீட்டுக்குள் எறிந்துவிட்டுப் போவதாக உலக மழலைகள் நம்புகிறார்கள். செயின்ட் நிக்கோலஸ்என்ற பாதிரியார்தான் கிறிஸ்துமஸ் தாத்தா ஆனதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு வரலாற்று ரீதியான ஆதாரம் இல்லை என்று சொல்வோரும் உண்டு.

ஆனாலும் என்ன, அன்பின் அடையாளம்தானே கிறிஸ்துமஸ் தாத்தா! அன்புதானே கிறிஸ்துமஸின் ஆதாரம்!

 

***

 

மரத்தருகே முத்தம்

 

* கிறிஸ்துமஸ் நாளில் கிறிஸ்துமஸ் மரத்தின் அருகே அன்பு முத்தங்களைப் பரிமாறிக்கொள்வது பல நாடுகளில் பாரள்பரிய வழக்கமாக இருக்கிறது. பழங்காலத்தில் அமைதி மற்றும் நட்புறவின் அடையாளமாக கிறிஸ்துமஸ் மரம் கருதப்பட்டது. அந்த அடிப்படையில் இந்தப் பழக்கம் வந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

 

* கிறிஸ்துமஸ் கேக்குகளில் நாணயம், மோதிரம் போன்றவற்றை மறைத்து வைத்துப் பரிசளிப்பது மேலை நாடுகளில் வழக்கம். நாணயம் கிடைக்கப் பெற்றவர் பணக்காரராவர். மோதிரம் கிடைத்தால் விரைவில் திருமணமாகும் என்பது பொதுவான நம்பிக்கை.

 

* மெக்சிகோவில் போய்ன்செட்டியாஎன்பது கிறிஸ்துமஸ் மலராகக் கருதப்படுகிறது. இதைப் புனித இரவின் பூஎன்கிறார்கள்.

* எழுத்துக் கலை நிபுணரான லூயிஸ் பிராங்க், ஜெர்மனியிலிருந்து 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு வந்து, கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை அனுப்பும் வழக்கத்தைப் பிரபலப்படுத்தினார்.

 

* ஸ்வீடனில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் ஒன்றாக ஜுல்பக் என்ற வைக்கோலால் ஆன வெள்ளாடு இடம் பெறுகிறது.

 

***

 

கிறிஸ்துமஸ் நம்பிக்கைகள்!

 

கிறிஸ்துமஸை ஒட்டி உலகளவில் பல நம்பிக்கைகள் நிலவுகின்றன.

அவற்றில் சில…

 

* கிறிஸ்துமஸ் நாளில் பிறக்கும் குழந்தைக்குச் சிறப்பு அதிர்ஷ்டம் உண்டு.

 

* கிறிஸ்துமஸ் நாளில் பனி பொழிந்தால் ஈஸ்டர் காலம் பசுமையாக இருக்கும்.

 

* கிறிஸ்துமஸ் நாளில் நீங்கள் எத்தனை வீடுகளில் விருந்து உண்கிறீர்களோ, வரு கிற ஆண்டில் அத்தனை மாதங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும்.

 

* கிறிஸ்துமஸ் மாலையில் நீங்கள் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் அடுத்த ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

 

* கிறிஸ்துமஸ் நள்ளிரவில் பரலோகத்தின் கதவுகள் திறக்கின்றன. அப்போது அமரராவோர் நேராக பரலோகத்தை அடைவர்.

 

* கிறிஸ்துமஸ் இரவில் ஏற்றப்படும் மெழுகுவர்த்திகள் மறுநாள் காலையில் அவை தானாக அணையும்வரை அணைக்கப்படக் கூடாது.

 

* கிரேக்க நாட்டில், தொடர்ந்து வரும் ஆண்டில் தங்களைத் துரதிர்ஷ்டம் தீண்டக்கூடாது என்பதற்காக மக்கள் கிறிஸ்துமஸ் காலத்தில் பழைய காலணிகளை எரிக்கிறார்கள்.

 

* உக்ரைனில், கிறிஸ்துமஸ் நாளில் வீட்டில் புதிதாக சிலந்தி வலை அமைத்திருந்தால் அது அதிர்ஷ்டகரமானதாகக் கருதப்படுகிறது.

 

 

நன்றி: குடும்பமலர்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s