பிறந்த நாள் வாழ்த்து
December 12, 2009எனக்கு பயம் உண்டு . . . உங்களுக்கு?
நவம்பர் 11, 2009பயம் என்பது இல்லாத மனிதன் உலகத்தில் இல்லை எனலாம். சிலருக்கு பயம் இருக்கும் ஆனாலும் அதை மறைத்து வீரமாக நடமாடுவார்கள் இல்லை நடிப்பார்கள்.
பலருக்கு தெனாலி பட கமல் போல் எதைப்பார்த்தாலும் பயம் இருக்கும் . . அவர்கள் பயத்தை வெளியில் சொல்லவே பயப்படுவார்கள்

சிலருக்கு மனிதர்களை கண்டால் பயம், சிலர் பார்த்தாலே பயம் இதற்கு பரிகாரமாக “சுத்தி போடுதல்” என்பதையும் கடைபிடிக்கின்றனர்.
நாயைக்கண்டால் பயப்படுபவர்கள் ரொம்ப அதிகம் . பலர் பயப்படமாட்டேன் என்று நாய் பக்கத்தில் சென்று கடி பட்டு அதன் பின் நாயை கண்டாலே காத தூரம் ஓடுவார்கள்
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழியும் நம்மிடத்தில் உண்டு
என் மகனிடம் கேட்டேன் உனக்கு எது பயம்?
தனியா இருக்கிறது தான் பயமா இருக்கும் என்றார்
நல்லவேளை எனக்கு எது பயம் என்று அவர் கேட்கவில்லை, ஆனால் அவரோடு இருக்கும் சில நேரங்கள் எனக்கு பயமேதான் காரணம் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டுமே.
என் மனைவிக்கு பயமே இல்லை அவள் பயந்து நான் பார்த்ததும் இல்லை. ஆனாலும் தனியாக எங்காவது போய் வா என்றால் பயப்படுவாள், கண்டிப்பாக நானும் போகவேண்டும் என்பாள், பல சமயங்களில் எனக்கு சந்தேகம் வருவதுண்டு வெளியே போய்வரும் போது எடுத்து வருகின்ற பைகளை சுமக்கத்தான் என்னையும் அழைத்து செல்கிறாள் என்று.
ஆனால் பல்லியைக்கண்டால் கொஞ்சம் பயப்படுவாள், ஹோட்டல்களில் சாப்பிட பயம் இப்படித்தான் சில பயங்கள்.
எங்கள் அம்மாவுக்கு நாங்கள் வெளியில் சென்று வந்தால் பயம். கண்பட்டுவிடும் என்பார்கள்
அப்பா பயப்பட்டு இதுநாள் வரை பார்த்ததில்லை. ஒருவேளை அம்மாவுக்கு பயப்படுவார்களோ தெரியவில்லை.
எனக்கு பயம் என்றால் முதல் இடத்தை பிடிப்பது உயரம்தான், 15 அடிக்கு மேலாக நின்று கீழே பார்க்க சொன்னால் மறுத்து விடுவேன் நான். . பலரும் பயப்படும் பாம்பு மேல் எனக்கு இன்னும் பயமில்லை. என் கண்ணில் பாம்பு படுவதுமில்லை. இருட்டு பயமாக இருந்தது என் 15 வயது வரை. இப்போ அதுவும் பயமில்லை.
![]()
இறைவன் பயம் உண்டு. நம்மை வழிநடத்தும் அவனுக்கு பயந்தேதான் ஆகவேண்டும், அதனாலோ என்னவோ தவறுகள் செய்ய அதிகம் பயப்படுவேன். அதனாலே என் மனைவி மேல் பயம் உண்டு. இதை இங்கு எழுதவில்லை என்றால் என்ன நடக்கும். அது குறித்தே கொஞ்சம் பயம் உண்டு.
இப்படி பயம் என்பது பலவிதப்படுகிறது. உங்களுக்கு எது குறித்து பயம் உண்டு என்பதை ஒரு தொடர்பதிவாக எழுதினாலும் நல்லது . . இல்லை உங்கள் பயம் குறித்து பயப்படாமல் இருந்தாலும் நல்லது.
பயப்படாதீர்கள் எல்லாருக்கும் பயம் உண்டு.
தொடரை ஏன் இழந்தோம்
நவம்பர் 9, 2009நமது சொந்த மண்ணில் 1986 க்கு பிறகு இந்த தொடரைத்தான் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை தொடர் துவங்கும் முன் இருந்தது எனக்கு.
1986 ல் கபில்தேவ் தலைமை ஏற்று இருந்த இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தை போல் 2009 இறுதியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய சுற்றுபயணித்திலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்தது.
அதற்கு தோதாக வெகு நாட்களுக்குப்பின் அணிக்கு திரும்பிய சேவாக் புது உற்சாகத்துடன் டெண்டுல்கருடன் இணைந்து சிறப்பான துவக்கத்தை தருவார் என நம்பினார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். ஆயினும் என் எண்ணம் சேவாக்குடன் காம்பீர் துவக்க ஆட்டக்காரராக வேண்டும் என்பதாகத்தான் இருந்தது.
நேருக்கு மாராக இரண்டாம் ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட காம்பீர் அந்த இடத்தில் சோபிக்கவில்லை என்பதே என் கருத்து. இதற்கு மாறாக துவக்க ஆட்டக்காரராக காம்பீரும் இரண்டாம் ஆட்டக்காரராக சச்சினும் ஆடியிருந்தால் பல மாற்றங்கள் நடந்திருக்கும். இது ஏமாற்றம் ஒன்று
துவக்க ஆட்டக்காரராக வந்த சேவாக் எல்லா ஆட்டத்திலும் வேக ஆட்டத்தை காட்டினார் ஆனால் விவேகமாக ஆடவில்லை. பந்துகளை எத்தனை வேகத்தில் ஆடுகளத்தின் வெளியே தள்ளினாரோ அதே போல் வேகமாக அவரும் வெளியேறினார். இது ஏமாற்றம் இரண்டு
யுவராஜ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றால் அதுவும் நடக்கவில்லை. மொத்தத்தில் குழுவாக இணைந்து பல வெற்றிகளை பெற்ற இந்திய அணி சொந்த மண்ணில் வெளிக்காட்டி கொள்ளாத பல காரணங்களால் இந்த தோல்வியை சந்தித்து உள்ளது. அதுவும் அனுபவஸ்தர்கள் இல்லாத இளம்கன்றுகளாகிய ஆஸ்திரேலிய அணியிடம் என்பது அதிர்ச்சியான விசயம்
கிடைத்த வாய்ப்புகளை ஏதோ ஓரளவுக்கு பயன் படுத்திய ஆஸ்திரேலியா அணி வெற்றிக்கனியை பறித்துள்ளது. பலம் பொருந்திய இரு அணிகளுக்கிடையேயான ஆட்டம் என்பதை விட குழப்பத்தில் இருந்த பலமான அணிக்கும் சாதிக்க நினைத்த இளமையான அணிக்குமான போட்டி என்பதே சரியானதாக இருக்கும். அணித்தலைமை என்பது சிறப்பானதாக அமைய வேண்டும் என்பதை மீண்டும் தோனி உணரவேண்டிய வாய்ப்பு இது.
அரவணைத்த செல்ல வேண்டிய தலைமைதான் வெற்றியை பறிக்கக்கூடியதாக இருக்கும். அதை கண்கூடாக தனது அணிக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலிய அணியையும் அணித்தலைமையையும் கண்டு தோனி உணர்ந்திருப்பாரேயானால் எதிர்காலத்திற்கு நல்லது. ஒரு சூப்பரான ஆட்டத்திற்கு அதிவும் மிகப்பெரிய இலக்கை அடைய வேண்டிய நிர்பந்தத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கட்டிபோட்ட சச்சின் இறுதியில் மிக மோசமான அவசியமில்லாத ஷாட் மூலம் வெளியேறியதும் . வெற்றியின் விளிம்பில் நின்று தோற்றபின் அடுத்த ஆட்டம் எப்படி இருக்க வேண்டும்???? அதுவும் முதல் பேட்டிங் கிடைத்த பிறகும் முதல் ஓவரிலே இரண்டு விக்கெட்களை இழந்து சீ என்ற நிலையில் ஆடிய பிறகும் தோனி நினைத்து கொள்வார் “நாங்கள் மனரீதியாக தோற்றோம்” என்று.
நீங்கள் தோற்கவில்லை உங்களை நம்பி நேரத்தையும் பணத்தையும் வீணாக்கும் இந்தியர்கள் தோற்கிறார்கள் என்பதே உண்மை. . உங்களுக்கிடையேயான ஈகோ பிரட்சனைகளும் பனிப்போர்களும் தீரும்வரை சச்சின் போன்ற திறமைசாலிகள் நிறைந்த அணியாக இருந்தாலும் வெற்றி என்பது எட்டாக்கனிதான் பின்குறிப்பு: இலங்கை சார்ந்த பதிவாளர் ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தை கேவலமாக விமர்சித்ததோடு இதே நிலை தொடர்ந்தால் காத்திருக்கும் அடுத்த சீரிஸ் ல் இலங்கையிடமும் தோல்வி பெறுவார்கள் என எழுதி இருக்கிறார். . உங்கள் பிரட்சனைகளை களைந்துவிட்டு இலங்கையை எதிர்கொள்வீர்களே யானால்தான் நான் அவர் முகத்தில் கரி பூசமுடியும். . இல்லை என்றால் . . . . .

